ஓம் நமோ விஜய கணபதே..

எந்தை பிரஹ்மஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் செய்த இந்த அலங்காரம் நம் கண் முன் நின்றிட, இந்த கவிதை..

அறுமூன்று விழி ஒக்கும் பளிங்கலங்காரமும்

அழிவிலா ஆதவன் நடுவில் ஒளிவட்டமாய்

பூமறைக்கும் தாமரையின் ஈராறு இதழ்களும்

மாதம் சேர் வருடமாய் உதயவனை போற்றவே

நெடுமல்லி மாலைகள் பெருவளைவின் மீது

கண்கோடி கண்டதனை நோக்குவதற்காக

ருத்திரனின் அக்ஷமும் பிரணவன் தனை சூழ

மரு ஒன்றும் இல்லாத மகுடங்கள் வைத்தே

வேழ முகம் கொண்டு வெண் திருநீறணிந்து

இருவினைகள் போக்கும் செவிமடல்கள் பரவி

பாசங்கள் ஒழிக்கும் பாசாயுதத்தோடு

நீசமாம் புலனைந்தும் ஐங்குசத் தால் அடங்க

நற்காவி பூக்கள் சூழ்ந்தவனை காட்ட

பொற்பதம் பணிபவரை காக்குமிரு சுதர்சனமும்

அற்புத பதமளிக்கும் அமிர்த கலயத்தோடு

நம்புவோர்க்கு வரமளிக்கும் தும்பிக்கை மாம்பழமும்

நான்முகன் பதமளிக்கும் நாகாபரணமும்

முப்புரம் நுகரும் மூஷிக வாகனன்

முப்பழம் கொண்ட அருட்பீடத்தில் அமர

கீதம் இசைக்கும் மணிகள் அங்கு ஒலிக்க

தூபமும் தீபமும் செய் நைவேத்தியமும்

ஆறைந்து, திராட்சையும், செவ்வனாசிப்பழமும்

அறிவும் மனமும் போன்று உடைத்த தேங்காயும்

ஜம்பு த்வீபனுக்கு நாவல் பழமும்

பூர்ண பிரணவனுக்கு வெண் கொழுக்கட்டையும்

ஐங்கரன் தன்னில் அடங்கும் நற் கணங்களும்

பஞ்ச கலயம் தன்னில் ஒளிரும் நற் பூதமும்/போதமும்

ஞானமாம் மயிலும் தீப ஒளிகாட்டி

நாளும் அவன் பதம் நாட, நம் கண் முன்னே நிற்கும்.