உள்ளகரம் பக்தி திரட்டு

ப்ரஹ்மஸ்ரீ நா கோபாலகிருஷ்ணன் பாகவதர் எழுதிய பக்தி / பாராயண நூல்கள்…

உள்ளகரம் பக்தி திரட்டு

ஸ்ரீ விஜய கணபதி ஆலயம், உள்ளகரம்

இயற்றியவர் – ப்ரஹ்மஸ்ரீ, திரு. நா. கோபாலகிருஷ்ணன்,

உள்ளகரம், சென்னை-91.

(ப்ரஹ்மஸ்ரீ நா.கோபாலகிருஷ்ண பாகவதர் எழுதிய பக்தி / பாராயண நூல்கள்)

உள்ளகரம் ஐந்து

உள்ளகர எழுத்தின்  வடிவினானை

உள்ளகரம் ஐந்தும் உடையானை 

உள்ளகரமே வந்து அமர்ந்தானை

உள்ள கரம் இரண்டால் வணங்குவோமே

தனிப் பூரண மோதகம் உள்ளகரம்

சதா முக்தி அருளவே  உள்ளகரம்

பாரதம் எழுத ஒரு கொம்பு உள்ளகரம்

பக்தர் பாடித்துதிப்பது உள்ளகரம்

யான்-ஐ  அடக்குமங்குசம் உள்ளகரம்

பாவம் பிளக்கும் பரசு உள்ளகரம்

மனிதர் மகிழ் துதிக்கை உள்ளகரம்

மங்கலம் சேர் மாதர் பாடுவது உள்ளகரம்

சிவன் வலத்தால் மாங்கனி உள்ளகரம்

அவல் பொரி கொழுக்கட்டை உள்ளகரம்

அமுத கலசம் துதிக்கையிலே உள்ளகரம்

அனைவரும் கைதொழுது ஏத்துவது உள்ளகரம்

விஜய கணபதி வந்தமர்ந்த உள்ளகரம்

விஜய குமாரனும் சேர்வது உள்ளகரம்

விஜய துர்க்கை அருள்வதும் உள்ளகரம்

விஜயம் எல்லாம் சேர்வதும் உள்ளகரம்

“ஜய ஜய வேலவ” ஸ்தோத்திரம்

23-7-84 அன்று ஸ்ரீ விஜய குமாரஸ்வாமிக்கு ஆடிக் கிருத்திகை உற்சவத்தின்போது வெளியிடப்பட்டது.

ஓம்

ஓம் சரவண பவாய நம:

கடவுள் வாழ்த்து

ஊரிலான் குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்

பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்

சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு

நேரிலான் உயிர் கடவுள் என்னுள்ளாய் நின்றான்

– கந்தபுராணம்

நாளென் செயும், வினைதானென் செயும், எனை நாடி வந்த

கோளென் செயும், கொடுங் கூற்றென் செயும், குமரேசரிரு

தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையுஞ் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

– கந்தர் அலங்காரம்

சஜ்ஜன பாலக சண்முக ஸ்தோத்திரம்

இமகிரி தந்தவள் தந்தவிநாயக இளையவ, சரவண சண்முகனே

உமையொரு பாகனின் கண்ணினில் வந்தவ கண்ணனின் மருகனே சண்முகனே

சமரர்கள் நற்றவப் பேற்றினில் வந்தவ தீயினில் வந்தவ சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜனபாலக சண்முகனே

கார்த்திகை மாதர்கள் கைபடவந்தவ கங்கையில்வந்தவ சண்முகனே

போர்திற வெம்பகை சூரர்கள் போக்கிட வந்தவ நாயக சண்முகனே

சாத்திர வேதமும் செஞ்சுடர் ஒளியென எழுந்திட வந்தவ சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜனபாலக சண்முகனே

வளமொடு செந்தமிழ் வளர்த்திட வந்தவ செஞ்சுடர்வானவ சண்முகனே

மலைமகள் அமுதுண மலையினில் தோன்றிய தென்றிசைநாயக சண்முகனே

தீயொடு மதியுடை சங்கர தேவனின் மங்களபாலக சண்முகனே

ஜயஜய வேலவ தானவநாசக சஜ்ஜனபாலக சண்முகனே

விடயிட வேலையும் விர்ரென சென்றிட கொடுமையழித்திடு சண்முகனே

முடியுடைச் சூரர்கள் அடியொழிந்திட வேலையெறிந்தவ சண்முகனே

தடமொடு குலகிரி தூள்பட உருவிய வேலுடைக் கழலுடைச் சண்முகனே

ஜயஜய் வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

முப்புர மெறியவே ஒரு கண முறுவல்செய் சங்கரநாயக சண்முகனே

அப்புர வீரமகேந் திர சூரனழிந்திடு மாற, குமாரனே சண்முகனே

சுப்பிர மணியென கற்றவர் போற்றிடும் நற்றமிழ் நாயக சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

மாயவன் மருகன்

மாகடல் தோன்றிய கொடுவிஷமுண்டவன் தந்தமதலையே சண்முகனே

மாநிலந்தாங்கிய மாபெருவராக மாயவன் மருகனே சண்முகனே

மாயை விலக்கிட மாமயில் ஏறி நீ மகிழ்வுடன் வருவாய் சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

தூணைப் பிளந்திட தோன்றிய செங்கட் சீயவன் மருகனே சண்முகனே

மானைத் தொடர்ந்து மாரீசனை மாய்த்திடு மாயவன் மருகனே சண்முகனே

யானைத் துரத்திட வள்ளியணைத்திடு யானை அணங்கணைச் சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

சக்கர மெறியவே வக்கிரன் அழித்திடு விக்ரமன் மருகனே சண்முகனே

உக்கிர கௌரவர் ஒருபட மரித்திட வந்தவன் மருகனே சண்முகனே

சுக்கிரனறிவுரை நீக்கிடுமாபலி நீக்கியோன் மருகனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

மலைமகள் கலைமகள் அலைமகள் குறமகள் சுரமகள் போற்றிடு சண்முகனே

அலைவளர் கழற்கால் வேந்தன் துணித்திடு ராமனின் மருகனே சண்முகனே

சிலைவளைக் கோசலை தலைமகன் மைதிலி நாயகன் மருகனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

தில்லையில் ஆடிய நல்லவர் நல்லவன் வல்லபடைமகன் சண்முகனே

முல்லை நிகர்த்திடு வள்ளியணைத்திடு எல்லை இன்பொருளே சண்முகனே

வில்லையுடைத்தெறி தோள்வலி மாயவன் மருகனே, முருகனே சண்முகனே

ஐயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன் பாலக சண்முகனே

குஞ்சரி கொஞ்சிட இஞ்சிசூழ் தஞ்சையில் செஞ்சிவ குருவே சண்முகனே

மூஞ்சுறு வாகன குஞ்சர இளையவ மஞ்ஞையில் ஏறிய சண்முகனே

வஞ்சின கஞ்சனை துஞ்சிட வெஞ்சமர் புரிஹரி மருகனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

நரிபரி மாற்றிய கரியினில் உற்றவன் அரிபணி அரனார் சண்முகனே

அரியுரு மாறிய மோகினி பெற்றவன் அரிஹர முதல்வனே சண்முகனே

துரிதுகில் வளர்ந்திட த்ரௌபதி போற்றிய துவரையன் மருகனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

காலனைக் கால்பட வீழ்த்திடு சூலியின் கேள்வியில் ஓதிய சண்முகனே

காமனைக் கனலெழ விழித்திடு குழகனின் கண்படு மழுகவே சண்முகனே

சேடனைப்பாயென விழைந்து துயின்றவன் பழையவன் மருகனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

தலைகளுருளவே களரிசூரரை வெருள வெருட்டிடு சண்முகனே

களிறு பிளிற்றவே அருளுந்துளபமணி மாயவன் மருகனே சண்முகனே

முளரி முன்னவன் உளறி தளரவே உலகை வளர்த்தருள் சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

புராதனி செல்வன்

நாரணி காரணி பூரணி யோக புராதனி செல்வனே சண்முகனே

நந்தினி தாரிணி தக்ஷணி மர்த்தினி மோகினி செல்வனே சண்முகனே

பர்வத வர்த்தினி மலையசுஹாசினி வாஹினி செல்வனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

சும்ப நிசும்பனைச் சண்டனை முண்டனை கொன்றிடு காளியின் சண்முகனே

அம்புலி நாகமும் கங்கையணிந்திடு அம்பிகைப்பாகனின் சண்முகனே

சாம்பவி பாலக தாருக நாசக சிங்கவிநாசக சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

சண்முக அனுபூதி

உள்ளிலும் வெளியிலும் ஒளியிலும் இருளிலும் அருளை வளர்த்தருள் சண்முகனே

அள்ளி அலை கொளும் குள்ளமுனிப்புகழ் தெள்ளு தமிழ்ப்புகழ் சண்முகனே

வெள்ளை களிற்றினில் துள்ளிடுவாசவன்தொல்லையைத்தீர்த்தருள் சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

சாரதை சங்கர அத்வைத மனோஹர சங்கர அரஹர சண்முகனே

ச்யாமள ரங்க ராமானுஜ, மத்துவ தத்துவம் நீயே சண்முகனே

பாரத புத்தனின் தத்வ மறுத்திடு அப்பரின் மணியே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜஜனபாலக சண்முகனே

மந்திரதந்திர யந்திரஜாலங்கொள் சர்வசுதந்திர சண்முகனே

சுந்தரர் முதலா நந்தவமணிகள் போற்றிஇசைத்திடு சண்முகனே

சாது அருணகிரி நொந்திடு போதினில் வந்திடு கந்தனே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

எண்ணிட முடியா மின்னிடுவிண்மீன் உந்திருமேனியா சண்முகனே

நுண்ணியஅணுவினுள் நுண்ணிய பொருளினுள் உள்ளவன் நீயோ சண்முகனே

கண்டு கொண்டவர் விண்டிட முடியா பண்டு நின்றவா சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

சர்வ வியாபியான சண்முகன்

ஒருகண நினையினில் ஊன்றிய வித்தினில் உழலெனப் படைத்தனை சண்முகனே

கருவென நிணமதில் வீணில் வளர்ந்திட ஏனனைப்படைத்தனை சண்முகனே

ஒருகுரலழுதுயான் பிறந்து விழித்திட ஒருவினை செய்தனை சண்முகனே

ஜயஜயவேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

பிள்ளையரற்றிட அள்ளியணைத்திடு அன்னையும் நீயே சண்முகனே

மெள்ள நடந்திடு செல்வனே என்றிடு தாதையும் நீயே சண்முகனே

சொல்லியழைத்திடு சுற்றமும் உற்றமும் சர்வமும் நீயே சண்முகனே

ஜயஜய வேவை தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

படிபடியென்றெனை கடிந்திடுங் குருவும் கல்வியும் நீயே சண்முகனே

கொடியிடை அசைத்திடு கடிமணப் பெண்ணெனும்மாயையும் நீயே சண்முகனே

அடியனை அன்பினால் ஆசையில் ஆட்டிடு கன்றுகள் நீயே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

நரைதிரை வந்து நடுங்கி ஒடுங்கிடும் போதுனை நினைந்தேன் சண்முகனே

மறை உரை பொருளே சேந்தனே கந்தனே காத்தருள்புரிவாய் சண்முகனே

கரையிலா சாகர வாழ்வது நீங்கிட கைகொடு வேலவ சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

கரிய எருமையின் கண்படுதென்னவன் கண்படா முன்னம்வா சண்முகனே

உரியபொருளிவன் என்றெனைக்கருதி நீ உன்னருள் தருவாய் சண்முகனே

துரியந்துரிய அதீத நிலையருள் பரம் பொருள் நீயே சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

பிரார்த்தனை

நோய்களின் வேதனை நொடியில் ஒழிந்திட மெய்யடிபோற்றினேன் சண்முகனே

பேய்களும் பூத பிசாசுகள் ஓடிட விடுவிடு வேலை சண்முகனே

பாயினில் கண்களில் உறங்கிடும் போதுநீ சேயெனக்காத்தருள் சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

எண்ணங்கள் நல்லவை எண்ணியபடிவர உன்னருள் தருவாய் சண்முகனே

முன்னம் செய்தீவினை கோள்களின் கொடுவினை நீங்கிடுவரந்தா சண்முகனே

கண்களில் நல்லவை கண்டிட, கேட்டிட திருவருள்செய்திடு சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

சுற்றம் பகைக்கிலும் உற்றம் பகைக்கினும் உற்றவன் நீயே சண்முகனே

சுற்றவர் செய்அபி சாரக மந்திரம் சுற்றிவராமல் செய் சண்முகனே

சடுகண் பார்வையும் கேடுறு செயல்களும் விடுவராமல் செய் சண்முகனே

ஐயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே

உன்னையே போற்றிட உலகில் விரும்பிய வண்ணமே செய்திடு சண்முகனே

உலகுவாழ் தெய்வ வணக்கமும்பூஜையும் உன்னையேபோற்றுது சண்முகனே

என்னை வளர்த்திடு எண்ணம் வளர்த்திடு உன்னருள்தந்திடு சண்முகனே

ஐயஜய வேலவ தானவ தாசக சஜ்ஜன பாலக சண்முகனே

வேலைப்பணிந்திட வாழ்வு அளித்திடு காலையின் செந்நிற சண்முகனே

கால்களைப் பற்றிட கண்ணில் இருத்திட கையில் அணைத்திடு சண்முகனே

மயிலைப்புகழ்ந்திட மனத்திருத்திட மெய்பதந்தருவாய் சண்முகனே

ஜயஜய வேலவ தானவ நாசக சஜ்ஜனபாலக சண்முகனே

முருகா சரணம்

முருகா சரணம்

முருகா சரணம்

ஓம் தத்சத்

ஸ்ரீ விஜய துர்காதேவி அஷ்டகம்

ஆனந்த பைரவி :

துதிப்போர்க்கு துயர்நீக்கும் கற்பகமே-நெஞ்சில்உனை

பதிப்போர்க்கு வரமருளும் அற்புதமே -எந்நாளும் உனை

மதிப்போர்க்குத் துணைநிற்கும் பொற்பதமே – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

மோஹனம்:

திருமாலுக்கு பரிமுகம் தந்தே திருவிளங்க காத்தவளே

இருசெவி வந்த  மதுகைடவரை ஒருதுடை வைத்தழிக்க

வைத்தவளே

ஓரைவர் வாழ நூற்றுவர் வீழ படைக்கலமீந்தவளே – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

ஸாவேரி :

கண்ணனுக்கு முன்பிறந்தே கம்சனை உதைத்தவளே – முக்

கண்ணனுக்கு எதிராட முன்வந்த ஓம்காரி-ஆயிரம்

கண்ணனுக்கு ஆதரவாய் அவதரித்த சிங்காரி – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

அடாணா:

செருக்காய் நின்ற மகிஷனை குறுக்கே பிளந்த திரிசூலி

அறுக்கினும்வாழ் ரக்தபீஜனை அள்ளிக்குடித்த மாகாளி

கழுத்தே கபாலமாலையாட என்கருத்தே புகுந்த – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

ஹிந்தோளம் :

அறுமூன்று கைகளுடன் அரிமீது ஏறி, அரசர்கள் ஓடி விழ

குறுநகை காட்டிநின்று சுதர்சனனை காத்த தேவி

அர்ச்சித்த ஏகவீரன் அகமகிழ வந்தவளே – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

கானடா :

காளிதாஸன்  கரிகாலன் பரமஹம்ஸ ராமகிருஷ்ணன்

காலமெல்லாம் வியத்துபோற்றும் மாகாளி அன்னையே

காக்கும் தெய்வம் நீயம்மா கவலைகளை சுட்டெரிக்கும் – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

பைரவி :

துர்கமனைச் சண்டமுண்டனை தூம்ரனை அழித்த சண்டி

துஷ்டஅசுரர் தலைகளை  வெட்டி பந்தாடிய காளகண்டி

துக்கம் பறந்தோட இன்பமே அருளவந்த கம்புகண்டி – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

மத்யமாவதி :

தூயவளே நின் கமலபாதம் தொழுவோர்க்கு நித்தம் – ஒரு

துயரமின்றி காத்துநின்று வழுவாது வரமருளும் தேவி

கருணைக்கண் திறந்தே தயவுசெய் தாயே – ஸ்ரீ விஜய

துர்காதேவி ஜகன்மாதா உள்ளகர வாசினியே

ஓம் தத்சத்

ஓம் சரவண பவாய நம

முருகா நூற்றெட்டு

7.7.2003 அன்று ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில்

விஜயகுமாரசாமிக்கு கந்தசஷ்டி லக்ஷார்சணை பூர்த்தியை

முன்னிட்டு 20 வது முறையாக இலவச வெளியீடு

விநாயகர் துதி

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக

தஞ்சத் தருள் சண்முகனுக்கு இயல்சேர்

செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

-கந்தரனுபூதி

துணை தேடல்

விழிக்குத் துணைதிரு மென்மலர்

பாதங்கள், மெய்ம்மைகுன் றா

மொழிக்குத் துணை முருகாவெனும்

நாமங்கள், முன்பு செய்த

பழிக்குத்துணை அவன்பன்னிரு

தோளும், பயந்த தனி

வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன்

மயூரமுமே

– கந்தர் அலங்காரம்

அழைப்பு

குன்றேறி விளையாடும்

குழந்தாயே முருகா

இன்னேர மெனைக்காக்க

வருவாயே முருகா

மன்றாடி உனைக்கேட்டேன்

தருவாயே முருகா

என்றேனும் உன்பாதம்

தருவாயே முருகா

பிறப்பு

நடமாடும் சிவனாரின்

நெற்றியிலே முருகா

நெருப்பெனவே நதிசேர்ந்து

வளர்ந்தாயே முருகா

நங்கையர்கள் ஆறுபேரும்

தாலாட்ட முருகா

நாள்தோறும் தமிழ்போல

வளர்ந்தாயே முருகா

தேவர் துதி

கொலைபாத அசுரர் கும்பு

பொறுக்காது முருகா

ஓலமிட்ட தேவர்போற்ற

வந்தாயே முருகா

காலிலிட்ட கழலொலிக்க

விளையாட முருகா

வேலெடுத்து வீரம்காட்ட

வந்தாயே முருகா

பிரமன் சிறை வைத்தல்

ஆதவன்போல் அருள்வீசும்

ஆண்டவனே முருகா

மேதினியை வாழ்விக்க

வந்தவனே முருகா

ஆதியென்ற ப்ரணவந்தனை

ஓதுகின்ற முருகா

வேதன்தலை குட்டுப்பட்ட

சிறைசெய்த முருகா

திருமாலுக்கு சக்கரம் அளித்தல்

முசுகுந்த சோழவந்தன்

பணிந்து நிற்க முருகா

விசும்பனைய விண்டுவேதன்

அடிபணிய முருகா

மெய்புகுந்த சக்கரத்தை

தந்தளித்த முருகா

பொய்யாத மழைபோல

பொழுதுவந்த முருகா

தந்தைக்கு உபதேசம்

சோழநாட்டு சாமிமலை

மீதமர்ந்த முருகா

சோதிசிவன் தலைவணங்க

ஓதுகின்ற முருகா

கோலமயில் ஏறிநின்று

கூடல்வந்த முருகா

வேலெடுத்து உள்ளகர

மேவிநின்ற முருகா

பழமாய் நிற்றல்

ஞானப்பழம் வேண்டி நின்று

ஞாலம் சுற்றி முருகா

யானைமுகன் அடைந்ததையே

கண்டுகொண்டு முருகா

ஞானமலை பழநிமலை

மீது நின்ற முருகா

தென்பழநி குன்றமர்ந்த

வடிவேலா முருகா

கடம்பனுடன் பொருதல்

கும்பமுனி போற்றுகின்ற

குணாளனே முருகா

வம்புசெய்த கடம்பந்தனை

வளைத்தவனே முருகா

தம்பிரானே தமிழ்செய்த

தமிழோனே முருகா

எம்பிரானே எனைக்காக்க

வருவோனே முருகா

கிரெஞ்சம் வீழ்தல்

கோழிக்கொடி வான்பறக்க

வளர்ந்து நின்ற முருகா

குடகரையின் கிரௌஞ்சமலை

குடைந்தவனே முருகா

வாழிவாழி என்று போற்ற

வழிநடந்த முருகா

வானவர்க்கு துணைசென்று

வாழவைத்த முருகா

அசுரர்கள் அழிப்பு

ஆரவாரப் பேய்களென

அசுரர்மாள முருகா

வீரங்காட்டி வேலெறிந்து

வென்றவனே முருகா

போர்பரணி தேவர்பாட

போந்தவனே முருகா

பார்புகழ சிலம்பொலிக்க

வந்தவனே முருகா

சூரர்படை முன்நடநத

இளையோனே முருகா

சூதுமிக்க சூரபதுமன்

ஒழித்தோனே முருகா

சிங்கமுகன், தாருகனை

வென்றவனே முருகா

சிங்கமென தமிழ்போற்றும்

வேலவனே முருகா

தேவயானையார் திருமணம்

நீலமயில் மீதமர்ந்த

நெடியோனே முருகா

வேலெறிந்து வெற்புவிழ

மகிழ்ந்தோனே முருகா

மூலப்பொருள் முழுஉருவாய்

வந்தவனே முருகா

ஓலமிட்டு அசுரர்கூட்டம்

ஓடவைத்த முருகா

இந்திரனும் தன் மகளை

ஈந்துநிற்க முருகா

மந்திரமும் மத்தளமும்

தாளம் கொட்ட முருகா

சொந்தமென கைபற்றி

நின்றவனே முருகா

கந்தவேளே காமவேளாய்

காணநின்ற முருகா

தேவர்போற்ற தேவயானை

கைபிடித்தோய் முருகா

தேவம்கள் யானையோடு

பரங்குன்ற முருகா

தேன்பழமுதிர் சோலையாட

சென்றவனே முருகா

தமிழ் மணக்க திருமுருகா

திளைத்தாயே முருகா

வள்ளி திருமணம்

நம்பிராஜன் பெற்றமகள்

வள்ளியம்மை முருகா

நம்பியுன்னை காதலித்து

ஆடிப்பாட முருகா

நாரதனும் அதனைவந்து

சொல்லிவைக்க முருகா

நங்கைவசம் ஆகவேண்டி

சென்றவனே முருகா

வேட்டுவனாய் வேடந்தாங்கி

சென்றவனே முருகா

வள்ளியம்மை கைப்பிடிக்க

விரும்பிநின்ற முருகா

தொட்டுவிட வள்ளியம்மை

கூச்சல்போட முருகா

காட்டுமரம் வேங்கைபோல

மாறிநின்ற முருகா

தண்டுஊன்றி கிழவன்போல

காதலிக்க முருகா

வேண்டுமென்று மாவைத்தின்று

விக்கிவிக்கி முருகா

தினைப்புலத்து குளமொன்றில்

விழுந்துவிட்ட முருகா

அணைக்கவள்ளி இன்பங்கண்ட

வேலவனே முருகா

ஆனைமுகன் துணைசெய்ய

ஆவல்கொண்ட முருகா

அன்புக்குற மங்கைதனை

அணைத்துக் கொண்ட முருகா

ஆணையிட்டு வள்ளிதனை

சிறையில் வைக்க முருகா

அன்னை சிறைமீட்டு நின்று

ஆதரித்த முருகா

திருத்தணிகை திருப்பதியில்

திருநின்ற முருகா

மருவிநிற்க வள்ளியம்மை

மணங்கொண்ட முருகா

அருவிபோல கருணையுள்ளம்

கொண்டவனே முருகா

கருமவினை நீக்கிடவே

காத்தருள்வாய் முருகா

வடிவழகா மால்மருகா

வேலவனே முருகா

வடிவேலைத் தாங்கிநிற்கும்

வடிவேலா முருகா

அடியார்கள் எங்கள்வினை

தீர்த்தருளும் முருகா

நெடியோனே தெய்வத்தமிழ்

வடிவேலா முருகா

திருநின்றவூர்கள்

ஆறுமுகம் ஆகிநின்ற

அரும்பொருளே முருகா

சீர்மேவும் வயலூரில்

நின்றவனே முருகா

திருக்கழுக் குன்றமர்ந்த

சண்முகனே முருகா

திருப்புகழால் அருணகிரி

போற்றுகின்ற முருகா

வேங்கடத்து பாறைதனில்

வேலெடுத்த முருகா

கொங்குமலை, தீர்த்தமலை,

அண்ணாமலை முருகா

கங்கைநிகர் பொன்னிபாயும்

பூமியிலே முருகா

பொங்குபுகழ் சீராப்பள்ளி

மலைநின்ற முருகா

திருமயிலை மயிலைமலை

மீதுநின்ற முருகா

திருப்பதியாம் செங்கோட்டில்

நின்றவனே முருகா

திருவானைக்காவலூரில்

காவல்நின்ற முருகா

திருவருணை காளத்தி

கண்டுநின்ற முருகா

வள்ளிமலை விராலிமலை

மீதமர்ந்த முருகா

வள்ளியூரில் சிதம்பரத்தில்

வந்தமர்ந்த முருகா

வடபழனி ஆலங்காடு

சென்றவனே முருகா

வடக்குத் திருமுல்லைவாயில்

வந்துநின்ற முருகா

கோடைநகர் போரூரில்

காணநின்ற முருகா

கந்தகோட்டம் குமரகோட்டம்

சென்றமர்ந்த முருகா

குடமூக்கு ஒற்றியூரில்

சென்றமர்ந்த முருகா

இடைகழியில் கந்தன்குடி

எட்டுகுடி முருகா

வேண்டல்

மதுராந்தக மீதுநின்ற

மணவாளா முருகா

மயிலத்தில் காசிநகர்

வந்தமர்ந்த முருகா

மதுரைநகர் சிக்கலில்

காணநின்ற முருகா

மனமிரங்கி ஏழையென்னை

காத்திடுவாய் முருகா

போற்றல்

வேல் முருகா வேல் முருகா

வேல் முருகா வேல் வேல்

வேல் முருகா வேல் முருகா

வேல் முருகா வேல் வேல்

பலஸ்ருதி

அறுபதி னெட்டில் ஆறுமுகம் தொழுவோர்

இன்பமும் பெருகிட, ஈடேறும் எண்ணங்கள்

உலகில் புகழ்ந்திட ஊரில் சிறந்திட

எதிலும் சிறப்பர் ஏற்றமும் கொள்வர்

ஐயங்கள் அகற்றிடும் ஒருமையென்றிடும்

ஓம்காரம் விளங்கிட (நல்ல) ஒளடதம் சரவணன்

ஒம் சரவண பவாய நம:

ஆண்டி அஷ்டகம்

ஆண்டவனாண்டி- பழநி

ஆண்டவனாண்டி

ஆதரிப்பாண்டி- அவன்

ஆட்கொள்ளுவாண்டி

ஆலயமாண்டி-மயில்

ஆடிடுமாண்டி அதில்

ஆண்மகனாண்டி- அவன்

அழகு வேலாண்டி

தலை எடுத்து நின்றாண்டி

தலை யெழுத் தழிப்பாண்டி

நிலை மாறி நின்றாண்டி

நிலை மாற்ற வந்தாண்டி

சிறு பாலகனாண்டி

சின்ன சேவடியாண்டி

சேவகனாண்டி – என்னை

சோதிக்குராண்டி

பல குழந்தை களாண்டி – அவன்

பால் கொடுப்பாண்டி

பறவை கொண்டாண்டி – அவன்

பரந்து நின்றாண்டி

கூட்டை வைத்தாண்டி- படை

வீட்டை வைத்தாண்டி

சக்தி வேலாண்டி – அவன்

சரணம் தந்தாண்டி

ஆறாய் நின்றாண்டி – கருணை

வெள்ளமானாண்டி- சிவ

சைவ மானாண்டி – தேவி

சாக்தமானாண்டி

வைணவமாண்டி – காணா

பெத்தியமாண்டி-மீ

மாமிசையாண்டி – மறை

உருவு கொண்டாண்டி

வேர் உச்சியிலாண்டி

கிளை பூமியிலாண்டி

இலை வேதங்களாண்டி

இதை அறிந்தவனாண்டி

உயிரறிந்த வனாண்டி

உண்மை யறிந்தவனாண்டி

நிலை அறிந்தவனாண்டி

நிலை பெற்றவனாண்டி

ஞான பண்டிதனாண்டி – குரு

வானவனாண்டி

ஏழு நிலையைச் சொன்னாண்டி

சுழும் நாடி சொன்னாண்டி

கலை காட்டி நின்றாண்டி

நிலை நிலைக்க வைத்தாண்டி

வாய் மூடவைத்தாண்டி

விந்தை காட்டி நின்றாண்டி

தேனா யானாண்டி – அவன்

பாலாயானாண்டி – திரு

நீராயானாண்டி-பன்

னீராயானாண்டி

சந்தணமாண்டி -பூக்

குங்குமமாண்டி

நாத மானாண்டி-மணி

நாதமானாண்டி

தூப மானாண்டி – அவன்

தீபமானாண்டி

கண் திறந்தாண்டி – என்னை

கண்டுகொண்டாண்டி

சிரித்து நின்றாண்டி- நீர்

சொரிய வைத்தாண்டி – மெய்

சிலிர வைத்தாண்டி-உள்ளே

ஒன்றி விட்டாண்டி

ஓம் தத்ஸத்!

பழநி அடைந்தால், பாவந் தீரும்!!!

ஓம் சரவணபவாய நம :

திருவழிபாடு அல்லது முருகன் மானசீக பூஜை

பால முருகன் பக்தஜன சபையாரால்

13, காசீம் அலி தெரு, சென்னை -5.

கந்தர் சஷ்டி (27-10-1968) அன்று

வெளியிடப்பட்டது.

ஓம் சரவணபவாய நம :

” திருவழிபாடு ” அல்லது “முருகன் மானசீக பூஜை “

என்னும் இத்துதிப்பாடலை, தினமும் காலையில் குளித்தவுடன்

ஈரத்துணியுடனேயே இருந்துகொண்டு, எல்லாம் வல்ல

இறைவன், முருகனது மலர்க்கழல் பாதங்களை மனதில்

தினைந்து, திருநீறு அணிந்துகொண்டு, மனத்தூய்மையுடன்

பக்தி சிரத்தையுடன் படித்துவரின், அன்னாருக்கு சகலவிதமான நோய்களும் அகன்று, மனக்கவலைகளும் அகன்று

நினைத்தவை கிடைக்கப்பெறும். அறுபடை வீட்டுக்கு

சென்று தரிசித்த புண்ணியமும், மற்றும் இறைவனை தினமும்

அபிஷேகம், ஆராதனை செய்த புண்ணியமும் கிடைக்கும்.

‘திருவழிபாடு’ படிப்பதற்கு முன் ‘கந்தர் சஷ்டி

கவசமோ’ அல்லது ‘சண்முக கவசமோ’ படிப்பது

மிகவும் நன்மை பயக்கும்,

‘திருவழிபாடு’ முடிந்தவுடன் ‘கந்தரனுபூதி’, கந்தர் அலங்காரம், தெய்வணிமாலை, திருமுருகாற்றுப்படை, முருகன்

பிள்ளைத்தமிழ், ஆண்டி அஷ்டகம், முருகா நூற்றெட்டு,

ஜயஜய வேலவ ஸ்தோத்திரம் முதலியவைகளில் ஏதேனும்

ஒன்றை பாராயணம் செய்தால் இறைவனது அருள்நோக்கு உண்டாகி,  மனோவலிமையும், இன்பமும், இஷ்டங்களையும் அடைவர்.

முருகன் துணை

திருவழிபாடு அல்லது முருகன் மானசீக பூஜை

காப்பு

ஓம்கார ரூபனை ஓரானை முகத்தானை

ஓரைந்து கையானை மூலாதார வாசனை

ஓர்வினை யறுப்பானை ஓதியுள்ளம் வைத்து

ஒரு திரு வழிபாட்டினையே உளத்தினில் செய்குவோமே

மூத்த அண்ணலே மூஞ்சுறு வாகனனே

மத்தள வயிரோனே சக்தியுமை பாலகனே

மெத்தச் சிவந்தவனை முத்துக் குமாரனை

சித்தம் கொணரவே சித்தி அருள்குவையே

ஓம்

ஆறுமுகத்தோனே அருள்ஞான தேசிகனே

ஆசனம் தந்தேன் எந்தன் ஆலய மனத்தினுள்ளே

அன்புடன் “பாத்யம்:”, “அர்க்யம்” அனைத்துமே உனக்களித்தேனே

“ஆசமனம்” தந்தேன் வா-நீ அழகிய குருமணி தேவா 

கருணைக்கடலேயுன்னை கண்மணி முருகாயுன்னை

திருமுழுக்காட்ட நல்ல எண்ணையால் காப்பும் செய்து

மருவிலாமேனியதணை மஞ்சள் நீராட்ட நானும்

மலர்க்கழல் பாதம் தொட்டேன் வாழிய வாழியவே.

ஆவின் பாலபிஷேகமும் பஞ்ச அமிர்தமும் தயிர் முழுக்காட்டும்

ஆசையோடு கலந்த நல்ல தேனாபிஷேகம் செய்தேன்

ஆவியே அமுதேயுனக்கு இளநீர், பன்னீர் முழுக்கும்

ஆனந்த சுக மணமான சந்தணம் சாற்றினேனே.

மந்திரமாவது நீறை சுந்தரமாகவே சாற்றி

மதிவதன மந்தஹாஸம் பார்த்தெந்தன் மெய்சிலிர்த்து

வந்தனம் செய்துசெய்து வாயார வாழ்த்தி வாழ்த்தி

கந்தனே மைந்தா உந்தன் கழல்பதம் கண்வைத்தேனே

இலவங்க ஏலம் மற்றும் வாசனைப்பொருள்கள் கூட்டி

இன்பமேயுனக்கு நானும் ‘ஆசமனம்’ தந்தேனய்யா

ஏரிதழல் மேனிக்குகந்த செவ்வண்ணப் பட்டுடுத்தி

அரிமருகா உனக்குநல்ல ஆபரணங்கள் பூட்டினேனே

பூத்த திருமேனிதன்னில் பூணூலைப் பூட்டிப்பார்த்து

காத்த கைவேல்வைத்து நல்ல கஸ்தூரி திலகம் வைத்து

சீர்த்த உந்தன் அங்கமெல்லாம் சந்தணம்தான் மெல்லப்பூசி

சீதளப் பிறை நுதலில் சிவந்த குங்குமமிட்டேனே.

செவ்வந்தி செவ்வரளி செந்தாமரை செம்பருத்தியும்

கடப்பமும் ஜாதிமுல்லை செண்பகமும் சம்பங்கியும்

வில்வமும் மருவும் மற்ற நல்ல நல்ல வாசம் வீசும்

விதவித மலர்கள் சேர்த்த வண்ணமாலை சூட்டினேனே.

கந்தனே செந்தில்வாழும் குமரனே, வாழிவாழி

தண்பதி தணிகைவாழும் குமரனே, வாழிவாழி

முத்தனே பழனிவாழும் சித்தனே, வாழிவாழி

வித்தகா வேலா உன்னை வாயார, வாழ்த்தினேனே.

சக்திசிவன் சாமிநாதா, திருப்பரங்கிரி தேவநாதா

பக்திசெய்து பாடினேனே, பழமுதிரும் சோலை வாசா

முக்திதரும் ஞானகுருவே சக்திவேலா – கந்தா உன்னை

சிக்கனவே மனத்து ஏழாம் படைவீட்டில் கொலு வைத்தேனே.

குறமகள் காதல்வள்ளி சுரமகள் தேவயானை

குழாத்துடன் கூடவந்தென் கும்பிடை ஏற்றுக்கொண்ட

குமரனே, குகனே உனக்கு குறியோடு ‘தூபம்’ காட்டி

குமிழ் நகை கண்டு நானும் தமிழ்மாலை பாடினேனே.

சுடர்மேனி திருவேயுனக்கு சுடர்விட்ட தீபம்காட்டி

சடைமுடி சிவனார்மகனோ, விடைதூக்கும் ஈசன் பாலன்

கடல்நிகர் அவுணர்சேனை களம்அறுத்த பாலன்-உனக்கு

கண் திருஷ்டி கழித்துக்கட்டி கண்மூடி போற்றினேனே

தத்திமி தாளம்கொட்டி தடையிலா கீதம்பாடி

சுத்தமாய் பரதங்காட்டி சுருதியுடன் மயிலுமாட

கற்றகாவடி கரகமாடி உற்றவாகற்றவா உன்னை

சுற்றிவந்து பாடிஆடி காதல்மனம் காட்டினேனே,

மிக்க அடிசிலும் ஒக்கபட்சணமும் தக்கொரு தட்டில் வைத்து

விக்கலகலவே பானகமும் விழுந்துபடா கனிகள், தேங்காய்

சக்கரைப் பாயசமும் நல்ல வக்கணை வடையதிரசமும்

பக்குவமாய் வைத்து உன்னை போஜனம்தான் செய்வித்தேனே 

வெற்றிலைப்பாக்கும் நல்ல ஏலமும் கிராம்பும் மற்றும்

வாசனைப் பொருள்கள் கூட்டி தாம்பூலமும் வாயில் ஊட்டி

சுற்றியே மணத்தை வீசும் கற்பூர தீபம்காட்டி

கொற்றக் குடை, சாமரமும் குளிர்ச்சியாய் வீசினேனே.

சுருதியும் வேதம் மந்த்ரம் சொல்லவே தெரியாது ஆனால்,

சுலபமாய் ‘முருகா’ என்றே ‘சரவணபவனே’ உன்னை

சிந்தையில் நிதமும் வைத்து சீர்பதம் போற்றிபோற்றி

வந்தனை செய்தேன் யானும் வளர்புகழ் வானவர் கோனே.

கண்மணி கந்தாபோற்றி கடம்பனே குமரா போற்றி

என்மனத்தீசா போற்றி என்குறை தீர்ப்பாய் போற்றி

தண்டையணி பாதாபோற்றி கார்த்திகை பாலாபோற்றி

எண்ணிய வரங்கள் எல்லாம் எங்களுக் கருளுவாயே.

சிவகுருநாதா சரணம் இளம்சேய் வீரா சரணம்

குறமகள் நாதா சரணம் குலம்வளர் வேலா சரணம்.

அரிமால் மருகா சரணம் கரிமுகன் இளையா சரணம்

முருகா நின்பாதம் சரணம் சரணம் உன்சீரடி சரணம்.

சரணம் சரணம் ஷண்முக பவ ஓம்

சரணம் சரணம் ஷண்முக பவ ஓம்

சரணம் சரணம் ஷண்முக பவ ஓம்

சரணம் சரணம் ஷண்முக பவ ஓம்

ஓம் தத்ஸத்!